WE DO NOT KNOW HOW TO SAY OUR THANKS TO THE CONTRIBUTORS, WEBSITE ADMINISTRATORS, SATHGURUS FOR THEIR VALUABLE VIEWS, ADVICES, FOR THE UPLIFTMENT OF THE MANKIND IN THE WORLD

Sunday, October 2, 2011

தலைகீழ் அரச மரமும் அதை வெட்டும் வழியும் - Bhagavath Gita

இந்த உலகத்தையும் அதில் சஞ்சரிக்கும் வாழ்க்கைகளையும் தலைகீழாய் இருக்கும் ஒரு அரசமரத்துக்கு ஒப்பாக சொல்கிறது கீதையின் பதினைந்தாவது அத்தியாயம், கொஞ்சம் படித்துப் பார்க்கலாமா?


எல்லாவற்றுக்கும் மேலான பரமனை சரண் புகுந்து யோகத்தில் இறங்குவது 'புருஷோத்தம யோகம்'. யோகமே செயல் யாவுக்கும் திறனாய் அமைவது. விசாலமான பார்வையினைத் தருவது. எங்கும் இருக்கும் கடவுளை எங்கும் காணும் திறனைத் தருவது.

----------------------------------------------------------------
1. பிரக்ருதியும், ஆன்மாவும் சேர்ந்து வானளாவிய 'அச்வதம்' எனும் அரசமரமாய் இப்பிரபஞ்சமெங்கும் பரவியிருக்கிறது. பிறவி, செயல், பலன், இறப்பு, மீண்டும் பிறவி, செயல் என எல்லாமும் இம்மரத்தில் அடங்கும். இம்மரத்தின் ஆணிவேரோ மேலிருந்து கீழேயாக, நிர்குண பிரமத்திடம் இருந்து வருகிறது. மேலே இருந்து வரும் வேர்களுக்குச் சமமானதாக, நிர்குணமாய் இருக்கும் பரமன், சர்குண நிலை பெற்று, ஆக்கம், நீக்கம் முதலியவற்றை செயல்படுத்துகிறான்.

இந்த மரத்தின் இலைகள் நன்நெறிகளைக் காட்டும் மறைகளுக்கு ஒப்பாகும். நன்நெறிகளால் விளையும் நற்பயன்கள் இலைகளில் இருந்து வரும் பழங்களுக்கு ஒப்பாகும். இந்த மரத்தின் சாராம்சத்தை எவன் உணர்கிறானோ, அவன் உண்மையை உணர்ந்தவன் ஆகிறான். மெய்ஞானத்தினை ஆணி வேருக்கு ஒப்பாகவும், அதிலிருந்து ஏற்படும் கிளை வேர்களை அஞ்ஞானத்திற்கும் ஒப்பாகவும் கொள்ளலாம். அஞ்ஞானத்தினால் மேலும் மேலும் கிளை வேர்கள் ஏற்பட்டு, ஆணி வேரிலிந்து பிரிந்து, மேலும் பலமாக இந்த மரம் பரந்து விடுகிறது.

பி.கு: தலைகீழாய் இருக்கும் இந்த மரத்தை மனிதனின் உடலுக்கு ஒப்பாகவும், மரத்தின் வேர்கள் மூளையின் அமைப்புக்கு ஒப்பாகவும் கூடச் சிலர் சொல்லுவார்கள்.

2. கிளைகள் மூலமாக குணங்கள் இலைகளைச் சென்றடையும். தான் சேர்த்து வைத்த குணங்கள் மூலமாக இலைகள் செழித்து வளர, அதனால் அந்த மரம் வளர்ந்து பெரிதாகிறது. சில கிளைகள் மேலேயும், சில கிளைகள் கீழே செல்லுவதுமாய் இருக்கின்றன. செயல்களில் தர்மச் செயல்கள், அதர்மச் செயல்கள் என இருப்பது போல. நற்செயலா, தீஞ்செயலா, என்பது 'ரஜஸ், தமஸ், சாத்வீகம்', எனும் முக்குணங்களின் கலவையால் தீர்மானிக்கப் படுகிறது.

மனித வாழ்க்கையில் தேடுதல் கிளைகளைக்கு ஒப்பு. இலைகளால் செழிக்கும் மரம் போல, வேதங்களால் உலகமும் செழிக்கிறது. மேலே இருந்து வரும் சத்தினை கீழ் நோக்கி செலுத்தி நிலத்தில் வேரூன்றும். இது மேலும் மேலும் வளர, கர்ம வினைகளால் இவ்வுலகத் தொடர்புகள் நீட்டித்து, உலக வாழ்க்கை என்னும் மரமும் செழித்து வளருகின்றது. புதுப்புது வினைகளையும் தோற்றுவிக்கின்றன.

பரவிச் செல்லும் கிளைகள் போல, வாழ்வின் பல்வேறு தேடுதல்களில் விளையும் ஆசையினால், செயல்களைப் புரிந்து, அவற்றால் பலனையும், மீண்டும் மீண்டும் செயல்களில் ஈடுபடவும் செய்கிறோம். கண் போன போக்கில் கால் போக நடக்க, மறைகள் சொல்லும் பாதையை மறந்து போனவர் வழி தடுமாறிட, கீழே போகும் கிளைகளாய், அவர்தம் அடுத்தடுத்த பிறவிகள், இன்னும் கீழான பிறப்புகளுக்கே இட்டுச் செல்கின்றது.

3. நம்மால் இந்த மரத்தின் ஆணிவேரின் ஆதியையோ, முடிவையோ காண இயலாது. பரமேஸ்வரனின் அடி, முடியினை அரியும் அயனும் தேடிக் காண இயலாதது போல, ஆணி வேரின் மூலத்தினையும், முடிவினையும் கண்டு கொள்ள இயலாது.

மேலும் மேலும், விழுதுகளால் நிலைபெற்று நிலத்தில் ஊன்றி விடுகிறது இம்மரம். குணங்களின் விளைவுகளுக்கு அடிமையாகி, மாந்தர் தம் வினைகள் பெருகிப் பெருகி, பிறவிப் பெருஞ்சுழலில் சிக்கித் தவிக்க, இதிலிருந்து அவர்கள் தப்புவதற்கான ஒரே வழி பற்றின்மையை பற்றிக்கொள்வதே. விளைவுகளில் விழுந்து விடாமல் நிஷ்காம்யமாக இருப்பதே, இம்மரத்தினை வெட்டி வீழ்த்துவதற்கான வாள் போன்றதாகும். சூரபதுமன் மாமரமாய் நின்றதும், ஞான வேலால் அவன் வெட்டுண்டு வீழ்ந்ததையும் ஒத்து நோக்குக.

கடற்கரையில் அலைகளைப் பார்க்கிறோம். நுரையோடு மேலெழும்பிக் கீழே விழும் நீரைத்தான் அலை என்கிறோம், 'நீர்' என்று சொல்லாமல். அந்த அலையின் உருவதை அகற்றி விட்டுப் பார்த்தால், தெரிவது நீர்தானே? அதுபோல, இந்த மரத்தின் உருவத்தையும், பெயரையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இருப்பது, பரமன் மட்டுமே. இந்த மரம் நம்மை உலக வாழ்க்கை என்னும் வட்டத்திற்குள்ளும், பிறவிச் சுழலுக்குள்ளும் அடைத்து வைக்கிறது. ஆன்ம விசாரம் செய்து பார்த்தால், இந்த மரம் என்று ஒன்று உண்மையில் இல்லாமல் இருப்பது புலனாகும். அதுவரை அந்த மரம் தெரிந்து கொண்டே இருக்கும். ஆகவேதான், "பிறவிச்சுழல், என்னும் இந்த மரத்தை, பற்றின்மை என்னும் கோடாலியால் வெட்டி வீழ்த்து" என்கிறான் பகவான் கண்ணன்.

4. இம்மரத்தை வெட்டி வீழ்த்தியபின், அந்த மரம் செழித்து வளர்ந்ததற்கு காரணமான பரமனையே சரண் புகுந்திட, அதுவே மோட்சமெனும் வீடுபேறு ஆகும். பரமனின் சத்தே வேர்களை மேலிருந்து கீழாக விழுதுகளை நிலத்தில் ஊன்றச் செய்தது. இது இயற்கையான நிகழ்வுதான். செயல்களைச் செய்ய வைத்ததும் அவன் நடத்தும் நாடகத்தில்தான். நிலத்தில் ஊன்றச் செய்ய வைத்த சத்தின் மூலமான பரமனை திரும்பிப் பார்ப்பதுவே யோகமாம் - புருஷோத்தம யோகமாகும்.

அலை என்ற எண்ணம் இருக்கும் வரை நீருக்கு தன்னுடைய தனிப்பட்ட உருவம் இருக்க, அதற்கு, 'தான், தனது' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். அது நீர்தான் - அதை சுற்றி சின்னதும், பெரியதுமாய் இருக்கிற பலப்பல அலைகளும், எல்லாமும், இந்தக் கடல் முழுதும் வியாபித்து இருக்கும் நீரெல்லாம் - ஒன்றேயான ஒட்டுமொத்த கடல்நீர் தான் என்பது உணர - அதற்கு அகந்தையற்ற நிலையில் - அது பரமன் எனும் பேரின்பக் களிப்பினைப் பருகுவதற்கான நிலைக்குத் தயாராகின்றது.

5. உயர்வான இந்நிலையினை அடைவதற்கான தகுதி என்ன? பகவான் கண்ணன் சொல்கிறான்: தானெனும் அகந்தை, தானெனும் மயக்கம், தானெனும் பற்று ஆகிவற்றை நீக்கி நிற்பதேயாம். அக்குணங்களைப் பெற்றவன், ஆத்ம ஞானத்தில் நிற்க, இன்ப துன்பங்கள் தரும் விருப்பு வெறுப்புகளைக் கடந்து நிற்க, அப்பேறு பெற்றவன் பரமபதம் என்னும் முடிவில்லா நிலையினை அடைகிறான்.

6. உயர்வான இந்நிலை எப்படி இருக்கும்? பரமபதம் என்னும் நிலைக்குச் சென்றவர், அவ்வின்ப நிலையில் இருந்து திரும்பிவரா நிலையாம் அது. (கண்டவர் விண்டிலர்). அவ்விடத்தை சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளிர்ந்திட இயலா. ஏனெனில், அவ்விடம், எவ்வொளிரும் பொருளுக்கும் மூலமாகவும், எல்லா ஒளி தரும் பொருளைக்காட்டிலும் பற்பல மடங்குகள் ஒளிர்வதான பரஞ்சோதியாம். எத்தனையோ மில்லியன் மைல்கள் கடந்து வர இயன்ற சூரியஒளியானாலும், புறக்கண்களை மறைக்கும் அளவிற்கு அது எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும், அதனால் அகத்தினை ஒளிர்விக்க இயலுமா என்ன? அதை பரமனின் அருள் ஒளியால் மட்டுமே இயலும்.


----
இவ்வாறாக, 15ஆம் அத்தியாயத்தின் முதல் ஆறு சுலோகங்களின் பொருள் விளக்கத்தினைப் படித்துப் பார்த்தோம். தொடர்ந்தும் பார்ப்போம்.

No comments:

Post a Comment