அமானுஷ்யங்கள் பற்றி ஸ்ரீ அன்னை – 1
கே: நம்மில் எத்தனை பேருக்குக் கடந்த பிறப்புகள் நினைவில் இருக்கின்றன?
ப: நம் உணர்வின் ஏதாவதொரு பாகத்தில் நம் எல்லோருக்குமே நினைவில் இருக்கும். ஆனால் இது அபாயகரமான விஷயமாகும். ஏனென்றால் சுவையான கற்பனைக் கதைகள் மனித மனத்துக்கு மிகவும் பிடித்தவையாகும். மறுபிறப்பு என்னும் உண்மையைப் பற்றி மனித மனம் ஏதாவது கொஞ்சம் தெரிந்து கொண்டு விட்டால் போதும், அது உடனேயே அதைச் சுற்றி அழகிய கதைகளைக் கட்ட விரும்புகிறது. …… இவற்றுக்கும் ஆன்மீக வாழ்விற்கும் சம்பந்தமேதும் இல்லை.
நம் முற்பிறவிகளைப் பற்றிய மெய்யான நினைவு, பூரண ஞானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அது இதுமாதிரியான கற்பனைகளால் வருவதில்லை.
கே: மறுபிறப்பு பற்றி…
ப: மறுபிறப்பைப் பொருத்தவரை எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பொது விதி என்று ஏதும் கிடையாது. சிலர் கிட்டத்தட்ட உடனேயே திரும்பப் பிறக்கிறார்கள். தம் குழந்தைகளிடம் மிகவும் பற்றுதல் வைத்துள்ள பெற்றோர்களுக்கு பெரும்பாலும் இப்படி நடக்கிறது. அவர்கள் இறக்கும்போது, அவர்களில் ஒரு பாகம் அவர்களுடைய குழந்தைகளிடம் ஒன்றிக் கொள்கிறது. சிலர் மறுபிறப்பு எடுக்க நூற்றாண்டுகள் அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம். தமக்குப் பொருத்தமான சூழலை அளிக்கக் கூடிய வாய்புகள் பக்குவமடையும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்.
கே: ஆவிகள், பேய்கள் பற்றிச் சொல்லுங்கள், அவை உண்மைதானா?
ப: ஆம். அவை சட உலகத்துக்கு அடுத்தாக உள்ள தளத்தில் வசிக்கும் ஜீவன்களாகும். அதைப் பிராண உலகம் என்கிறோம். இந்தப் பிராண உலகம் ஆசைகள், உந்துதல்கள், வெறிகள் மற்றும் வன்முறை, பேராசை, சூது, பற்பல வகையினா அறியாமை போன்றவையெல்லாம் அடங்கிய உலகமாகும். ….. அந்த உலகத்தின் உயிர்களுக்கு சட உலகத்தின் மீது இயல்பாகவே ஒரு விதமான பிடி உண்டு. சட உலகத்தின் மீது அவை நம்முடைய மிகத் தீய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.
மனிதர்கள் இறந்த பிறகு அவர்களுடைய பாகங்களில் சில சட தளத்துக்கு அருகில் உள்ள பிராணச் சூழலில் தொடர்ந்து நீடிக்கின்றன. அந்த எஞ்சிய பாகங்கள் இப்படிப்பட்ட பிராண ஜீவன்களாக ஆவதுண்டு. இறந்த மனிதனின் ஆசைகள், வேட்கைகள் ஆகியவை அவனது உடல் அழிந்த பின்பும் தம் வடிவத்தோடு அங்கே தொடர்ந்து மிதந்து கொண்டிருக்கின்றன. அடிக்கடி அவை தம்மை வெளிப்படுத்தி திருப்தியடைவதற்காகச் செய்லபடுகின்றன. இவ்வாறுதான் ஒருவகையான பிராண லோக ஜீவன்கள் தோன்றுகின்றன. ஆனால் இவை அற்பமானவையாகும். இவற்றைச் சமாளிப்பது முடியாத காரியமல்ல.
ஆனால் ஒருபோதும் மனித வடிவத்தில் இருந்திராத வேறு வகை உயிர்கள் உண்டு; அவை மிக ஆபத்தானவையாகும். அவை பூமியில் மனித உடலினுள் ஒருபோதும் பிறக்காதவையாகும். அப்படி உடலில் பிறந்து சடப்பொருளுக்கு அடிமையாவதை விட, அவை தம் பிராண உலகிலேயே தங்கிக் கொண்டு, அங்கிருந்து பூமியிலுள்ள உயிர்களின் மீது ஆற்றலோடு விஷமத்தனமான ஆட்சி செலுத்துவதையே விரும்புகின்றன.
அவை முதலில் ஒரு மனிதனை தன் கட்டுப்பாட்டின் கீழ் படிப்படியாகக் கொண்டு வருகின்றன. பின்னர் அவனது ஆன்மாவையும், மனித மனத்தையும் வெளியேற்றி அவனை தம்முடைய முழு உடைமை ஆக்கிக் கொள்கின்றன. இந்தப் பேய்கள் புவியிலுள்ள ஒரு மனித உடலைப் பீடித்துக் கொள்ளும்போது அவை மனிதனைப் போலத் தோன்றலாம். ஆனால் அங்கே மனித இயல்பு இருக்காது. ஆகவே இவ்வகைப் பிராண உலக ஜீவர்களோடு தொடர்பு கொள்வது எவ்விதத்திலும் நன்மையைத் தராது.
கே: மரணத்தின் பின்….??
ப: மனிதன் சட உடலில் பாதுகாப்பாக, சௌகரியமாக இருக்கிறான். உடலே அவனுடைய பாதுகாப்பாகும். சிலர் தம் உடல்களை மிக இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். மரணத்துக்குப் பின் உடல் இல்லாதபோது எல்லாம் இப்போதை விட நன்றாக இருக்கும், எளிதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் உடல்தான் உன் புகலிடம். …. சிலர் ’இந்த உடலில் இருப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது’ என்கிறார்கள். மரணமே விடுதலையாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.
நன்றி : ஸ்ரீ அன்னை, கேள்வி-பதில்கள் மற்றும் White Roses, அரவிந்தர் ஆசிரமம், புதுவை
No comments:
Post a Comment